பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர், தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
இதனால், சர்ஃப்ராஸ் அஹமதின் மோசமான கேப்டன்ஷிப் காரணமாக, அவரை கேப்டன் பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அசர் அலியும், ஒருநாள், டி20 போட்டிகளின் கேப்டனாக பாபர் அசாம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில், சர்ஃப்ராஸ் அஹமது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முதலில் கேப்டன்ஷிப்பை இழந்த அவர், தற்போது தனது இடத்தையும் இழந்துள்ளார்.
இதையும் படிங்க: 'தோனிக்கும் தான் வயசாயிடுச்சு அவர் விளையாடலையா?' - சர்ஃபராஸ் அகமது மனைவி கேள்வி!
அதேசமயம், டெஸ்ட், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பல்வேறு புதிய வீரர்களுக்கும் அதேசமயம் மூத்த வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. "தொடரில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஆக்கிரோஷமான ஆட்டத்தில் ஈடுபடவேண்டும். இம்முறை பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற பல்வேறு இளம் வீரர்கள் நிச்சயம் பாகிஸ்தான் அணியின் துருப்புச்சீட்டாக செயல்படுவர்" என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.
டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16ஆவது இளம் பந்துவீச்சாளர் நசிம் ஷா, 19ஆவது வயது வீரர் முசா கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலும் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்ஃபான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சிட்னியில் நவம்பர் 3ஆம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் டி20 அணி:பாபர் அசாம் (கேப்டன்), அசிஃப் அலி, ஃபகர் சமான், ஹரிஸ் சோஹைல், இஃப்டிகர் அஹமது, இமாத் வாசிம், இமாம்-உல்-ஹக், குஸ்தில் ஷா, முகமது ஆமிர், முகமது ஹஸ்னைன், முகமது இர்ஃபான், முகமது ரிஸ்வான் (விக்கெட்கீப்பர்), முசா கான், வஹாப் ரியாஸ், ஷதாப் கான், உஸ்மான் காதிர்
டெஸ்ட் அணி:அசார் அலி (கேப்டன்), அபித் அலி, அசாத் ஷஃபிக், பாபர் அசாம், ஹாரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், இம்ரான் கான் சீனியர், இஃப்டிகர் அஹமது, கஷித், முகமது அபாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட்கீப்பர்), நுசா கான், நசிம் ஷா, ஷனீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், யசிர் ஷா