இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டநாள் இன்று (ஜூலை 20) மான்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக, இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது.
இதையடுத்து இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்தபோது, தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 356 பந்துகளில் 17 பவுண்டரி 2 சிக்சருடன் 176 ரன்களை விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டான் சேஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரேக் பிராத்வெயிட் (75), ஷம்ரா ப்ரூக்ஸ் (68), ரோஸ்டான் சேஸ் (51) ஆகியோர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 182 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில் ஜாஸ் பட்லர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில், இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்ட நாளில் அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் அரை சதம் விளாசினார். மறுமுனையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தனது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாவது நிலை டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போட்டியில் வெற்றிபெற 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் தனது விவேகமாகச் செயல்பட்டு, சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் வேகத்தைக் காட்டினார். 57 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்துவருகிறது.
உணவு இடைவெளி வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறுகிறது. ஜான் கேம்பல் (4), கிரேக் பிராத்வெயிட் (12), ஷாட் ஹோப் (7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ப்ரூக்ஸ் இரண்டு ரன்களிலும், ரோஸ்டான் சேஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 287 ரன்கள் தேவைப்படும் நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இதனால் இன்றைய கடைசி ஆட்டநாளில் மீதமுள்ள 74 ஓவர்களை தாக்குப் பிடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியை டிரா செய்யுமா அல்லது இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரைச் சமன் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.