இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் 205 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் அக்சர் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது.
இதனையடுத்து, இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றி பென் ஸ்டோக்ஸிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய ரஹானே - ரோஹித்துடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.