காலே: இலங்கை நிர்ணயித்த 164 ரன்னை நான்கு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து எடுத்தது. ஜோ ரூட், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து களம் கண்டது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இலங்கை காணப்பட்டது. காலேயில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 381 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஏஞ்சலோ மேத்தீஸ் அதிகபட்சமாக 110 ரன்கள் குவித்தார். நிரோஷன் திக்வெல்லா தன் பங்குக்கு 92 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 29 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 28 ஓவர் வீசிய மார்க் வூட் 84 ரன்கள் வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியால் 344 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில் கேப்டன் ஜோ ரூட் அதிரடி மற்றும் பொறுப்புடன் ஆடி 186 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 55 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கையின் லசித் எம்புல்தெனியா 42 ஓவர்கள் வீசி 137 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரமேஷ் மெண்டிஸ் 16 ஓவர்கள் வீசி 48 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
அடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கமே அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த குஷால் பெரேரா, லகிரு திரிமண்ணே 14, 13 ரன்னில் பெவிலியல் திரும்பினர். அடுத்து வந்த ஒசடா பெர்ணாண்டோ, ஏஞ்சலோ மேத்தீஸ், தினேஷ் சண்டிமால், கேப்டன் நிரோஷன் திக்வெல்லா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் முறையே 3,5,9,7 என நடையை கட்டினர்.
ரமேஷ் மெண்டிஸ் 16 ரன், தில்ருவான் பெரேரா ஆகியோர் தன் பங்குக்கு 16,4 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டம் காட்டிய லசித் எம்புல்தெனியா 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அசிதா பெர்ணாண்டோ ரன் எதுவும் எடுக்கவில்லை. சுரங்கா லக்மால் 11 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.
இலங்கை அணி 35.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் முதல் வரிசை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு ஓவர்கள் மட்டுமே வீசினார். 16 ஓவர்கள் வீசிய டாம் பெஸ், 14 ஓவர் வீசிய ஜாக் லீச் 14 தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 1.5 ஓவர் மட்டுமே வீசிய ஜோ ரூட் ஒரு ஓவர் மெய்டனுடன் இரு விக்கெட்டுகளை சாய்த்தார்
இதைத்தொடர்ந்து 164 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராக்லி, டாம் சிப்லி களமிறங்கினர். இதில் ஜாக் கிராக்லி 13 ரன்னில் அவுட் ஆக, ஜானி பெர்ஸ்டோவ் 29 ரன்கள் எடுத்தார்.