தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடரில் விளையாடிவந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், நேற்று கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக் வீரர்கள் டி காக், ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பவுமா 33 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாப் டூ பிளெசிஸ் - வெண்டர் டவுசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக வெண்டர் டவுசன் 74 ரன்களையும், டூ பிளெசிஸ் 52 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜேசன் ராய் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - டேவிட் மாலன் இணை அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றியது.
சிறப்பாக விளையாடிவந்த இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சதத்தையும் பொருட்படுத்தாமல் சிங்கிள் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது.
மேலும் டி20 தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசியின் சர்வதேச டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்