நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் இத்தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இதனிடையே இன்று நான்காவது போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் சவுதி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பெய்ர்ஸ்டோ 8 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்த டாம் பேண்டன் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டாவிட் மாலன் - கேப்டன் இயான் மார்கன் இணை நியூசிலாந்தின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளும் சிக்சருமாக விளாசி ரன் குவிப்பை அதகளப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதோடு பல சாதனைகளையும் முறியடித்தனர்.
அதன்பின் டாவிட் மாலன் 48 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்திருந்தபோது கடைசி ஓவரில் மார்கன் 91 ரன்களில் (41 பந்துகள், 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்களைக் குவித்தது.
இதுவே டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக அந்த அணி 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 230 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.