இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (செப்.13) மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் - ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து இயன் மோர்கனும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார்.
இறுதியில் டாம் கரன், அதில் ரஷீத் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.