இங்கிலாந்து அணி கடந்த மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 எனக் கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதின. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற, இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.
இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கேப்டன் டி காக் 69, டேவிட் மில்லர் 69*, ஸ்மட்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித் 3 மோயின் அலி, சக்கிப் மஹ்மூத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் ஜானி பெய்ர்ஸ்டோ இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் எடுத்த நிலையில் ராய் 21 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெய்ர்ஸ்டோ 43 ரன்கள் (23 பந்துகள் 6 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.