இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று (செப்.04) சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தார். இருப்பினும் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோவ் எட்டு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - மாலன் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பட்லர், 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 66 ரன்களையும், ஜோஸ் பட்லர் 44 ரன்களை எடுத்தனர்.