தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடந்த நவ.06ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அப்போட்டிக்கு முன்னதாக இரண்டு தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, போட்டி அட்டவணை மாற்றியமைப்பட்டன. பின்னர் இங்கிலாந்து அணி ஊழியர்களுக்கும் கரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, ஒருநாள் தொடரை கைவிடுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்தன.
இந்நிலையில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை கைவிட்டது தவறல்ல என்றும், அவர்களின் முடிவு பாராட்டுக்குரியது என்றும் சிஎஸ்ஏ வின் இடைக்கால தலைவர் ஜட்ஜ் ஜாக் யாகூப் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜட்ஜ் ஜாக் யாகூப் கூறுகையில், “நான் மறுக்க விரும்புவது எங்களது பாதுகாப்பு சேவைகள் தரமற்றவை என்ற கருத்தை மட்டுமே. ஏனென்றால் அது எதிர்மறையான விமர்சனங்களுக்கு வழிவகுக்கின்றன. எங்களது பாதுகாப்பு சேவைகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறப்பானதாகவே இருந்தது.
அதேசமயம் இங்கிலாந்து அணி எங்களுடனான சுற்றுப்பயணத்தை கைவிட்டது தவறல்ல. அவர்களின் முடிவு பாராட்டுக்குரியது. அவர்கள் தங்கள் வீரர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்கள் இந்த சுற்றுப்பயணத்தை கைவிட்டுள்ளனர். அதனால் நாங்கள் அவர்களை குறைகூற விரும்பவில்லை. அந்தசூழலில் நாங்கள் இருந்தாலும் இதைதான் செய்திருப்போம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 26ஆம் தேதி முதல் நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் கோலி & ரோஹித்!