தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று 4.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இருநாட்டு வீரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவில், தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.