இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாம் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாக் கிராலே, ஆர்ச்சருக்கு பதிலாக சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றனர். பாகிஸ்தான் அணியில் ஷடாப் கானுக்கு பதிலாக ஃபவாட் ஆலம் இடம்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் - அபித் அலி இணை ஆட்டத்தைத் தொடங்கியது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ஷான் மசூத், இந்தப் போட்டியில் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். இதையடுத்து கேப்டன் அசார் அலி களமிறங்கி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
23ஆவது ஓவரின்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அசார் அலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் பாபர் அசாம் - அபித் அலி இணை பாகிஸ்தான் அணி ஸ்கோரை உயர்த்தியது.