ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரராகத் திகழ்ந்தவர் ஹாமில்டன் மசகட்சா. 2001இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17 தான். இதையடுத்து, தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயதிலேயே (17 வயது 254 நாட்கள் ) சதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
பின்னர், அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் போட்டியில் முதல்முறையாக என்ட்ரி கொடுத்தார். மூன்று விதமான ஃபார்மெட்டுக்கும் ஏற்றவாறு பேட்டிங் செய்யும் திறன் படைத்தவர், மசகட்சா. ஓப்பனிங் வீரரான இவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு குறிப்பிட்ட பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரோடு தான் ஓய்வு பெறுவதாக மசகட்சா அறிவித்திருந்தார். முன்னதாக, அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ஐசிசி இடைக்காலத் தடை விதித்த பிறகு, பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். இதையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில், ஹாமில்டன் மசகட்சா தனது செல்லப்பெயரான முதுரா பெயர் பொறித்த ஜெர்சியில் களமிறங்கினார்.
பின்னர், கடைசியாக பேட்டிங் செய்ய வந்த மசகட்சாவுக்கு ஜிம்பாப்வே வீரர்கள் "காட் ஆஃப் ஹானர்’' தந்து கெளரவப்படுத்தினர். இதையடுத்து, 156 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில், கேப்டன் மசகட்சா சிறப்பாகப் பேட்டிங் செய்தார். எதிர்கொண்ட 42 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது அற்புதமான ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், ஜிம்பாப்வே வீரர்கள் இவரது கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று மசகட்சாவுக்கு பிரியா விடைகொடுத்துள்ளனர்.