மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். தற்போது, ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து, 122 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லான்னிங், எல்லீஸ் பெர்ரி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், 17.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது.