தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த இரண்டு வார காலமாக பேசுபொருளாக இருந்துவருகிறது. காரணம் அந்த அணியின் இடைக்கால நிர்வாக இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் நியமனம், அதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் என வரிசையாக பல மாறுதல்களை சந்தித்ததே ஆகும்.
மேலும் புதிய பயிற்சியாளரான மார்க் பவுச்சர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, தேவை ஏற்படும் பட்சத்தில் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸை அணிக்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான மான்சி சூப்பர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டிவில்லியர்ஸ் இடம்பெற்றுள்ள ஷவானே ஸ்பார்டன்ஸ், தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது.
இப்போட்டிக்குப் பின் பேசிய டூ பிளஸ்ஸிஸ், புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்கு கொண்டு வரவேண்டும் எனக் கூறியதை வரவேற்கிறேன். டிவில்லியர்ஸை அணிக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
மேலும் உலகக்கோப்பை தொடருக்கு அதிக நாட்கள் இல்லை, மேலும் அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி குறைந்த டி20 தொடர்களிலேயே விளையாடுகிறது. இதனால் டிவில்லியர்ஸை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் நடைபெறும் என்றார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலேயே கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கியமானது என குறிப்பிட்ட டூ பிளஸ்ஸிஸ், இந்த மாற்றம் வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவருக்கும் உதவியாக இருக்கும். அணி சிறப்பாக செயல்படவேண்டும் என்றே அனைவரும் விரும்புவர், அதே போன்று சரியான இடத்தில் சரியான ஆட்கள் இருப்பதையும் அனைவரும் உறுதி செய்யவேண்டும். இந்த புதிய தொடக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் என்றார்.