இந்தியா அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக ஒருநாள் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக 21 வயதே ஆன ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ரிஷப் பந்தின் கீப்பிங், பேட்டிங் பற்றி பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த வங்கதேச அணியுடனான முதலாவது டி20 போட்டியிலும் இவரின் தவறான கணிப்பால் இந்திய அணி வங்கதேசத்திடம் முதல் முறையாக டி20 போட்டியில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறுகையில், "நான் முன்பு கூறியது போல, ஒப்பீடுகளில் நான் பெரிய ஆர்வம் காட்டுபவன் இல்லை. ஆனால் இந்திய ரசிகர்கள் ரிஷப் பந்தை, தோனியுடன் ஒப்பிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியில் தோனி தனக்கென ஒரு மிகப்பெரும் இடத்தைப் பிடித்தவர். ஒரு நாள் யாராவது அந்த இடத்தை நிரப்பக்கூடும், ஆனால் அது தற்போது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார்.