பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கராச்சியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.
இத்தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் - அபித் அலி இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதில் சிறப்பாக விளையாடிய அபித் அலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் அவர் 281 பந்துகளில் 174 ரன்களுடன் வெளியேறி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அபித் அலி, தனது பேட்டிங் பற்றி மனம் திறந்துள்ளார்.
செய்தியாளர்களிடையே அவர் கூறுகையில், "நான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கற்றுக்கொண்டதே இன்று என்னை சாதனை படைக்க வைத்தது" என சுருக்கமாக கூறினார்.
மேலும் அவர், "நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாவதற்கு முன்பு நான் விளையாடிய 105 முதல் தர போட்டிகளே என்னுடைய பேட்டிங் திறனை மேம்படுத்தியது. அப்போது நான் நினைத்தது என்னவென்றால், ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை நான் எவ்வாறு பயன்படுத்த போகிறேன் என்பதுதான். அதனை நான் இப்போது பயன்படுத்திவிட்டேன்" என தெரிவித்தார்.
அபித் அலி இந்தப் போட்டியில் சதமடித்ததின் மூலம் தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்கள்:பிக் பேஷ் லீக்: 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற ஸ்கார்ச்சர்ஸ்!