தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து வேகங்களை சமாளித்து உலக சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா? - குவிண்டன் டி காக்

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையோன நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 466 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

eng vs sa
eng vs sa

By

Published : Jan 27, 2020, 12:06 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தொடங்கியது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிப்பதால் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்காவின் டி காக் அதிகபட்சமாக 76 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா இரண்டு, சாம் கரண் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஜோ ரூட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் 217 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிசை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடியது. இங்கிலாந்து வீரர்கள் ஸாக் கிராலே 24, டோமினிக் சிப்லி 44, கேப்டன் ஜோ ரூட் 58, பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்க அடுத்து களமிறங்கிய வீரர்களில் சாம் கரண் (35), தவிர்த்து மற்றவர்கள் பெரிதாகத் தாக்குப்பிடிக்காததால் அந்த அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்குவந்தது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 466 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக சேஸ் செய்தால் அது உலக சாதனையாக அமையும்.

குவிண்டன் டி காக்

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியெழுந்துள்ளது. காரணம் நடந்துவரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் டி காக் தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகின்றனர். எனவே இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடினால் மட்டுமே வெற்றி அல்லது டிரா செய்ய முடியும்.

டூபிளஸ்ஸிஸ்

இதே வேளையில் இங்கிலாந்து அணியில் பிராடு, வோக்ஸ், மார்க் வுட், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் என வேகப்பந்துவீச்சு கூட்டணி மிரட்டுகிறது. எனவே டீன் எல்கர், பீட்டர் மாலன், கேப்டன் டூபிளஸ்ஸிஸ் என அனைவரும் கைக்கொடுத்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும்.

மேலும், ஜோகன்னஸ்பர்க்கில் 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 450 ரன்கள் குவித்ததே, அந்த மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இது தவிர அந்த மைதானத்தில் 2011ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 310 ரன்களை சேஸ்செய்து ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதே வெற்றிகரமான துரத்தலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போலீஸ் VS பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details