தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி.கே.வின் மரணமாஸ் கேட்ச்! - ஷாக்கான ரசிகர்கள்

தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஒரே கையில் பந்தை பறந்து பிடித்த காணொலியைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

Dinesh karthik

By

Published : Nov 6, 2019, 2:31 PM IST

டி.கே. என செல்லமாக அழைக்கப்படுவர் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். 2004இல் இருந்து இந்திய அணிக்காக விளையாடிவரும் இவர், அவ்வபோது தனது அசாத்திய விக்கெட் கீப்பிங் திறனை வெளிப்படுத்திவருகிறார். குறிப்பாக, 2004இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மைக்கல் வாகனை டைவ் செய்து ஸ்டெம்பிங் செய்தததை, ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

34 வயதானாலும் தான் எப்போதும் விக்கெட் கீப்பிங்கில் கெத்துதான் என்பதை தியோதர் டிராபி தொடரில் நிரூபித்திக்காட்டியுள்ளார். இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் இந்தியா சி அணிக்காக விளையாடினார். இப்போட்டியில் இந்தியா பி அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், ஒன்பதாவது ஓவரின்போது, தினேஷ் கார்த்திக் அட்டகாசமான கேட்ச் பிடித்து இந்தியா பி அணியின் கேப்டன் பார்த்திவ் படேலை அவுட் செய்தார். இஷாந்த் பாரோல் வீசிய ஒன்பதாவது ஓவரின் கடைசி பந்தை ஸ்ட்ரைட் திசையில் ஆட முயன்றார் பார்த்திவ் படேல்.

ஆனால், பேட்டில் எட்ஜ் ஆகி நேராக முதல் ஸ்லிப் திசைக்கு சென்ற பந்தை, தினேஷ் கார்த்திக் தனது இடதுபக்கத்தில் டைவ் அடித்து ஒரே கையில் பிடித்து மிரட்டினார். தற்போது டி.கே. வின் இந்த சூப்பர் கேட்ச் காணொலி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. 34 வயதிலும் இவரது விக்கெட் கீப்பிங் திறனைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இறுதியில், அப்போட்டியில் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணியை வீழ்த்தி தியோதர் டிராபியை கைப்பற்றியது.

ABOUT THE AUTHOR

...view details