தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமாக வலம் வருபவர் டூ பிளசிஸ். இவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது பற்றியும், தனக்கு பிடித்த ஐபிஎல் தருணங்கள் பற்றியும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், கடந்த பத்து ஆண்டுகளாக நான் சிஎஸ்கே அணியுடன் பயணித்து வருகிறேன். அதில் சில நம்ப முடியாத சம்பவங்கள், மறக்கமுடியாத நினைவுகள் எனக்கு உள்ளன. நான் அவ்வளவு நினைவாற்றல் பெற்றவன் அல்ல, அதனால் ஏதேனும் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.
கடந்த வருடம் ஆர்சிபி அணியுடனான ஆட்டத்தின் போது நாங்கள் 60 ரன்களுக்கு, 6 அல்லது 7 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அப்பொது நான் 90 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆல் அவுட் ஆகிவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் களத்தில் தோனி இருந்ததால், அந்த சூழ்நிலையை நிதானமாகக் கையாளுவார் என எண்ணிக்கொண்டிருந்தோம். நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவர் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இறுதியில் ஒரு ஓவருக்கு 26 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. ஆனால் சிறிதும் கவலைப்படாமல் சிக்சர்களை விளாசி அதிரடியில் அனைவரையும் மிரட்டினார். அந்தப் போட்டியில் தோனி 40 பந்துகளில் 87 ரன்களை விளாசியது என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணம்.