ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. சில ஆண்டுகளாக போட்டியை சாதகமாக முடிப்பதற்கு ஃபினிஷர் இல்லாமல் தவித்து வரும் ஆஸ்திரேலிய அணி, சரியான ஃபினிஷரைத் தேடிவருகிறது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' ஆஸ்திரேலிய அணியில் எப்போதும் சரியான ஃபினிஷரோடு வலம் வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மைக் ஹசி, மைக்கில் பெவன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த ஃபினிஷிங்கைக் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது ஃபினிஷிங்கில் சரியான ஆள் இல்லாமல் இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு தோனி சிறந்த ஃபினிஷிங்கில் மாஸ்டராக செயல்பட்டு வந்தார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் சிறந்த ஃபினிஷராக உருமாறியுள்ளார்'' எனக் கூறினார்.