இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆக.15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தோனியின் முடிவுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தோனி தனித்திறன் படைத்தவர் என்றும், அவர் ஒரு அரிதான வீரர் என்றும் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கங்குலி, ‘தோனியை மூன்றாவது இடத்தில் களமிறக்கியது குறித்து இன்றும் பலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் நான் செல்வது ஒன்றுதான். சச்சினை நீங்கள் 6ஆவது இடத்தில் களமிறக்கியிருந்தால், அவர் இன்று சச்சினாக இருந்திருக்க மாட்டார்.
அதுபோல தான் தோனியும். ஒரு வீரர் ஓய்வறையில் இருந்து கொண்டு சிறப்பாக விளையாட முடியாது. அதேபோல் ஒருவரின் திறனை அறிந்து அவரது பேட்டிங் வரிசையை மாற்றினால் அது நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலனைத் தரும் என்பதை நான் நம்புகிறேன்.