இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது வித்தியாசமான பேட்டிங், விக்கெட் கீப்பிங் முறையினால் அன் ஆர்த்தோடக்ஸ் வீரராக அறியப்படுகிறார்.
இந்நிலையில் பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் தோனி வித்தியாசமான அணுகு முறையை கையாண்டாலும், கை-கண் ஒருங்கிணைப்பும், மன வலிமையும் தான் அவரை சிறந்த வீரனாக மாற்றியது என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டைபு தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், "2005இல் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில்தான் நான் முதன் முதலில் தோனியைப் பார்த்தேன். அப்போது விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் தோனியைவிட தினேஷ் கார்த்திக் இயற்கையிலே திறன் படைத்த வீரராகத் தெரிந்தார்.
தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது அவரது இரண்டு கைகள் எப்போதும் ஒன்றாக இருக்காது. ஆனாலும் பந்தை மின்னல் வேகத்தில் பிடிப்பதிலும், ஸ்டெம்பிங் செய்வதிலும் அவர் வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறார்.
அதே அணுகுமுறையைத்தான் அவர் பேட்டிங்கிலும் பயன்படுத்திவருகிறார். ஆனால் இவை இரண்டையும் தாண்டி அவரது கை-கண் ஒருங்கிணைப்பும், மன வலிமையும் தான் தோனி சிறந்த வீரராகக் மாற்றியது" என்றார்.