கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் டி20 தொடர், கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, பிரபல தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தோனி குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பிராவோ, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல உலகத்தரம் வாய்ந்த கேப்டன்களை கண்டுள்ளது. அதில் ஃபாப் டூ பிளேசிஸ், பிரண்டன் மெக்குலம், மைக் ஹஸ்ஸி போன்றவர்களை உதாரணமாக கூறலாம்.
இவர்கள் பல்வேறு நாடுகளுடைய அணியின் கேப்டன்கள். ஆனால் தோனி மட்டும் எப்போதுமே அனைவரிடத்திலும், நீங்கள் இங்கு இருப்பதால் அனைவரும் சமமான வீரர்களே. நேரம் வரும் போது உங்களை நிரூபித்தால் மட்டும் போதுமானது. அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ நீயாக இரு என்று கூறுவார்.