கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடனும், அவ்வபோது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் நேரத்தை கடத்திவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களிடம் சமூக வலைதள நேரலை மூலம் நேர்காணல் நடத்திவருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, முன்னாள் சிஎஸ்கே வீரரும், தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் - சுரேஷ் ரெய்னா இந்த நேரலையின் போது சுரேஷ் ரெய்னா, “நீங்கள் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச தோனி ஆதரவு தெரிவித்தார். மேலும் தற்போது உங்களுடைய பவர்பிளே பந்துவீச்சின் சராசரியை பாருங்கள், அது எப்போதும் ஆறுக்கு குறைவாகவே இருக்கும். நீங்கள் எப்போது பவர்பிளேவில் பந்துவீசினாலும், விக்கெட்டை வீழ்த்தக்கூடியவர். இதன் காரணமாகவே தோனி உங்களை முழுவதுமாக நம்பினார்.
நீங்கள் புனே அணியில் விளையாடியபோதும் சரி, பஞ்சாப் அணியில் விளையாடியபோதும் சரி நான் எனது அணி வீரர்களிடம், அஸ்வினின் பந்துவீச்சை நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் எதிர்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்குவேன். ஏனெனில் உங்களது கேரம் பால் பந்துவீச்சானது பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்து விக்கெட்டை இழக்கச் செய்துவிடும்” என்றார்.
இதையும் படிங்க:ரசிகரைத் தாக்கிய சர்ச்சையில் டோட்டன்ஹாம் அணி வீரர்!