ஐபிஎல் தொடர் என்றாலே ரசிகர்களின் எண்ணத்தில் தோன்றுவது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு எப்படிபஞ்சமிருக்காதோ, அதுபோலத்தான் சென்னை-மும்பை போட்டிகளும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பும்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், சென்னை அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவரிடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏன் தலைசிறந்த அணியாக விளங்கிவருகிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மோர்கல், “சிஎஸ்கே அணியின் வெற்றிக்குக் காரணம் அணியின் கேப்டன் தோனிதான். இந்தியாவில் தோனி என்றால் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் டி20, ஒருநாள் போட்டிகளில் அவரைப் போன்ற ஒரு வீரர், கேப்டன் கிடைப்பது சாத்தியமில்லை. ஒரு கேப்டனாக வீரர்களின் திறமையைக் கண்டறிந்து, அவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்துவது அவருடைய தனித்திறமை.
மேலும் சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் அணியுடனே வைத்துக் கொள்வது அவரின் ஒரு மந்திரமாகவே கருதப்படுகிறது. பத்து தொடர்களில் எட்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியுமானால் அது தோனியால் மட்டுமே முடியும். அதனால்தான் கூறினேன் சென்னை அணியின் வெற்றிக்குக் காரணம் தோனி மட்டுமே.