உள்ளூர் கிரிக்கெட்டின் ரன் இயந்திரமாகத் திகழ்ந்துவந்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் பற்றி பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில் தற்போது ஜாஃபரும் இணைந்துள்ளார்.
ஜாஃபர் தனது ட்விட்டரில், "தோனி தற்போது சரியான ஃபார்முடனும், உடற்தகுதியுடனும் இருந்தால் அவரைத் தாண்டி நம்மால் வேறொரு வீரரைப் பார்க்க இயலாது என நினைக்கிறேன். ஏனெனில் ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவர் ஒரு மிகப்பெரும் பலமாக இருப்பார். அதேசமயம் பேட்டிங் வரிசையையும் ஆட்டத்திற்கேற்ப மாற்றிக்கொள்வார்.
மேலும் தோனி அணியில் இடம்பெற்றால் அது ராகுலின் சுமையை குறைக்கும். அப்படி இந்திய அணி ஒரு இடக்கை பேட்ஸ்மேனை விரும்பினால் ரிஷப் பந்தை பேட்ஸ்மேனாக களமிறக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகிவருகிறார். அண்மையில் பிசிசிஐயும் தனது வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலிலிருந்து தோனியை நீக்கியது.
இதனால் பல முன்னணி வீரர்களும் தோனியின் எதிர்காலம் குறித்தான கேள்விகளை எழுப்பிவரும் நிலையில், ஜாஃபர் தற்போது கூறியுள்ள கருத்து தோனி ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:கரோனாவை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் - ஹிட்மேன்