இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி, கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். இதனால், அணியில் அவருக்கு அடுத்தப்படியாக விக்கெட் கீப்பராக உள்ள இளம் வீரர் ரிஷப் பந்திற்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆனால், கடும் எதிர்பார்ப்புகளாலும், அழுத்தத்தாலும் அவரால் விக்கெட் கீப்பராக சிறப்பாக ஜொலிக்க முடியாமல் போனது. இருப்பினும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து ரிஷப் பந்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், ரிஷப் பந்த் தனது ஐபிஎல் அணியான டெல்லி கேபிட்டல்ஸுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். அப்போது தோனி குறித்து பேசிய அவர்,
"களத்திலும் சரி வெளியேவும் சரி தோனிதான் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். எனக்கு எப்போது பிரச்னை வந்தாலும் அவரை நான் அணுகுவேன். அப்பிரச்னைகளிலிருந்து வெளியவர அவர் சில ஆலோசனைகளை மட்டுமே கூறுவார். ஆனால் என்றும் நிரந்தரத் தீர்வை வழங்க மாட்டார். அவர் வழங்கும் ஆலோசனைகளால் எனது பிரச்னைகளை நானே தீர்த்துக்கொள்ள உதவுகிறது. நான் அவரை முழுமையாக சார்ந்து இருக்கக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருப்பார்.
அணியில் எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னரும் அவர்தான். அவருடன் சேர்ந்து சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளேன். அவர் க்ரீஸில் இருந்தாலே பேட்டிங் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர் வைத்திருக்கும் திட்டங்களே நம்மை வழிநடத்தும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவால் கபில்தேவ் ஆக முடியாது - அப்துல் ரசாக்