முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 24ஆம் தேதி இயற்கை எய்தினார். இதற்கு பல்வேறு தலைவர்களும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஜேட்லி தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போதிலும் கிரிக்கெட்டிலும் அதீத ஆர்வம் காட்டினார். ஆம், அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நான்கு வருடங்கள்(1999-2013) பதவி வகித்தார்.
பந்து வீசும் அருன் ஜேட்லி அவர் தலைவராக இருந்த காலகட்டங்களில்தான் டெல்லி மைதானம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்பட்டது. மேலும், அவர் கொடுத்த முக்கியத்துவத்தாலும் ஊக்கத்தாலும்தான் டெல்லியிலிருந்து சேவாக், கோலி, கம்பீர் ஆகிய திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு வரத் தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் அருண் ஜேட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான சேவாக், கம்பீர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் மிகவும் உருக்கமான அஞ்சலியை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
அந்த வகையில் கவுதம் கம்பீர், ’அருண் ஜேட்லியின் மறைவு தன்னை மிகவும் வருத்தமடைய செய்வதாகவும், தன்னில் ஒரு பாதி பிரிந்து சென்றுவிட்டது எனவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும், அவர் தனக்கு தந்தை போன்றவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லி ஆளுநர் அனில் பைஜாலுக்கு கடிதம் ஒன்றை அவர் அளித்தார். அந்தக் கடிதத்தில், கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட ஜேட்லியின் நினைவாக யமுனா விளையாட்டு வளாகத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், புகழ்பெற்ற ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் பெயரை சூட்டப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் அந்த பதிவில், வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி பெரிய விழாவாக நடத்தி ஜேட்லியை கௌரவிக்கும் விதமாக அவரது பெயரை சூட்டப்படும் எனவும் அறிவித்துள்ளது. சமீபத்தில், கோட்லா மைதானத்தில் அமைந்துள்ள ஒரு ஸ்டாண்டிற்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயரை வைக்கப் போவதாக அறிவித்திருந்தனர். எனவே, அதையும் இதே விழாவில் சேர்த்து நடத்தப் போவதாகவும் டெல்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரஜத் சர்மா, ”டெல்லி மைதானத்தை உலகத் தரத்தில் உயர்த்திய ஒருவருக்கு அவரின் பெயரை அந்த மைதானத்திற்கு சூட்டுவதைவிட வேறு என்ன பெரிதாக எங்களால் செய்துவிட முடியும். அவர் தந்த ஊக்கத்தால்தான் சேவாக், கோலி, ரிசப் பண்ட், கம்பீர் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்”, என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவை கம்பீர் உள்பட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வரவேற்றுள்ளனர்.