இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஏழு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று சூரத் நகரில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்திருந்தது.
இப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர் என 43 ரன்கள் அடித்தார். இதனிடையே, இப்போட்டியின் மூலம், 15 வயது இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, 131 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இருப்பினும், தனிஒருவராக மிக்னான் டு பிரேஸ் அசத்தலாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டூ பிரேஸ் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த லாபாவும் ராதா யாதவ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் டக் அவுட்டானார். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்திய அணி இப்போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில், நான்கு ஓவர்கள் வீசி வெறும் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார். அவரது பந்துவீச்சில் மூன்று மெய்டன்களும் அடங்கும். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை சூரத் நகரில் நடைபெறவுள்ளது.