இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
ஆனால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் தனது முதுகு பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக இவர் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனி மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளது.
தீபாக் சஹார் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசியவர். அதுவும் வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 22ஆம் தேதி கட்டாக்கில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறிய சம்பவம் இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல்: கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள்... அதிர்ச்சியில் உறையும் ரசிகர்கள்!