மும்பை: 14ஆவது ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் நேற்று (ஏப்.9) சென்னையில் தொடங்கின. இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, சென்னையை பேட்டிங் செய்ய பணித்தது. சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வார்ட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர்.
ரெய்னா அரைசதம்
தொடக்கமே சென்னைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. டுபிளஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆவேஸ் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த மொயின் அலி 24 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் ருத்ராஜ் 5 ரன்னில் வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய ரெய்னா 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து அம்பத்தி ராயுடு (23), ரவீந்திர ஜடேஜா (26) என தன்பங்குக்கு ரன் சேர்த்துவிட்டு வரிசையாக பெவிலியன் திரும்பினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் இருக்கைக்கு திரும்பினார். இதற்கிடையில் அதிரடி காட்டிய சாம் கரன் , சென்னை ரசிகர்களுக்கு அத்தி பூத்தால்போய் தெரிந்தார். இவர்,15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என விளாசி 34 ரன்கள் குவித்தார்.
189 ரன்கள் இலக்கு
இதையடுத்து சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் ஆவேஸ் கான் மற்றும் கிரிஸ் வோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரவிசந்திரன் அஸ்வின், டாம் கரன் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களம் இறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதேநேரம் நேர்த்தியாகவும் விளையாடியது. இதனால், முதல் விக்கெட்டை வீழ்த்த சென்னை அணி 13 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது.
பிரித்வி ஷா- ஷிகர் தவான் அதிரடி
இந்நிலையில் 38 பந்துகளில் 72 ரன்கள் (3 சிக்ஸர், 9 பவுண்டரி) எடுத்திருந்த பிரித்வி ஷா, பிராவோ பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் நங்கூரம் பாய்ந்தது போல் ஷிகர் தவானும் 47 பந்துகளில் 71 ரன்களுடன் (2 சிக்ஸர், 7 பவுண்டரி) நின்று ஆடினார்.
தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். அவரும் தன் பங்குக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 4 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 16ஆவது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. புல்டாசாக வீசிய அடுத்த பந்தை இடது திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் தவான். இதனால் 22 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது பந்தை ஓங்கி அடிக்க முயற்சித்த தவான், எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். அவர் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து ஸ்டோனிக்ஸ் இறங்கினார்.
டெல்லி அபார வெற்றி
டெல்லி அணியின் வெற்றிக்கு 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில், ஸ்டோன்ஸ் 14 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அணியை தாகூர் வீசிய 18.3ஆவது பந்தை பவுண்டரிக்கு விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ரிஷப் பந்த். டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்வானார்.