ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 2015 முதல் 2017வரை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக விளங்கினார். அவரது சிறப்பான ஆட்டத்தாலும், கேப்டன்ஷிப்பாலும் ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியதால் அவருக்கு எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்க ஓராண்டு காலம் தடைவிதிக்கப்பட்டது.
இதனால், ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக கேன் வில்லியமன்சன் பொறுப்பேற்று அணியை இறுதிச் சுற்றுவரை கொண்டுச்சென்றார். தடை முடிந்த பிறகு கடந்த ஐபிஎல் சீசனில் அவர் கம்பேக் தந்தாலும், கேன் வில்லியம்சனே கேப்டனாகச் செயல்பட்டார்.
கேன் வில்லியம்சனின் கூல் கேப்டன்ஷிப்பாலும், வார்னரின் அதிரடியாலும் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுவரை சென்றது. இதைத்தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வார்னர் மீண்டும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனக்கு மீண்டும் கேப்டனாகப் பொறுப்பை வழங்கிய அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாகக் களமிறவுள்ளதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், கடந்த இரண்டு சீசன்களில் அணியை சிறப்பாக வழி நடத்திய கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சிப்பேன் எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டேவிட் வார்னர் இதுவரை மூன்றுமுறை (2015, 2017, 2019) அதிக ரன்களைக் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு : வார்னர் அறிவிப்பு