ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் மைதானத்தில் வார்ம்-அப் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
இந்தப் பயிற்சி முடிந்து பின் வீரர்கள் உடைமாற்றும் அறைக்குத் திரும்புகையில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான வார்னர், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு குட்டி ரசிகருக்கு கிஃப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சியளித்தார். வார்னர் அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவன் வைத்திருந்த கப்பில் தனது ஹேண்ட் கிளவுசை போட்டுச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுவன் வாயைப் பிளந்துகொண்டு உற்சாகத்தில் திளைத்தான்.
அதிரடி மன்னன் வார்னர் நேற்று 33ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளுக்கு கிஃப்டை எதிர்பார்க்காமல் தனது குட்டி ரசிகருக்கு சர்ஃப்ரைஸ் கிஃப்ட் அளித்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைப் போட்டியில் அதிரடியாக விளையாடிய வார்னர் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் விளாசி 100 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரின் முதல் சர்வதேச டி20 சதமாகும். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்த 234 ரன்களை குவித்தது.
அதன்பின் சேஸிங் செய்த இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.