தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (சிஎஸ்ஏ) சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 2020-21ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க ஆடவர் அணிக்கு 16 வீரர்களும், மகளிர் அணிக்கு 14 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. மாறாக அந்த அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ரிக்ஸ் (Beuran Hendricks) முதல் முறையாகத் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்ஏ தலைமை நிர்வாகி ஜாக்யூஸ் பால் கூறுகையில், நாங்கள் இந்தாண்டிற்கான ஆடவர் அணியைச் சேர்ந்த 16 வீரர்களையும், மகளிர் அணியைச் சேர்ந்த 14 வீராங்கனைகளையும் தேர்வு செய்துள்ளோம். மேலும் இந்த வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.