இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும்பாலான 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிவரும் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஆளுமை தாதாதான்.
கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது தலைநிமிர்ந்து நிற்பதற்கு கபில் தேவ், கங்குலி, தோனி, கோலி ஆகியோரது கேப்டன்ஷிப் காரணம் என்றாலும், இதில் கங்குலியின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. சுருக்கமாக இந்திய கிரிக்கெட் அணியை கங்குலிக்கு முன், கங்குலிக்கு பின் என்றுதான் பிரிக்க வேண்டும். அவர் கட்டமைத்த இந்திய அணியை வைத்துதான் இந்தியாவுக்கு 2011இல் உலகக்கோப்பை கிடைத்தது.
மேட்ச் ஃபிக்சிங், சூதாட்டம் ஆகியவற்றால் இந்திய அணி அழுக்கடைந்து கிடந்தபோது, அணியின் கேப்டனாக கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றப் பிறகு, ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்து அணியை புதுப்பித்து வெற்றி என்னும் பாதையை நோக்கி பயணிக்க வைத்தார். இவரது கேப்டன்ஷிப்பால் சச்சின் மீண்டும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்.
குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த வீரர்கள் உருவாகக் காரணகர்த்தாவே கங்குலிதான். சேவாக், ஹர்பஜன், யுவராஜ் சிங், ஜாகிர் கான், முகமது கைஃப் - இவ்வளவு ஏன்...! 'தல' என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி ஆகியோருக்கு வாய்ப்பளித்தார். பின்னாட்களில் அவர்கள் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களாக ஜொலித்தனர்.
தனது இடத்தை மற்ற வீரர்களுக்கு அளித்து அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்கித் தந்தவர் கங்குலி. குறிப்பாக, தனது ஓப்பனிங் ஸ்லாட்டை சேவாக்கிற்கு தந்தார். அதேபோல, 2005இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு தடுமாறிக்கொண்டிருந்த தோனியை தனது மூன்றாவது பேட்டிங் வரிசையில் ஆடவைத்தார்.
இதுபோன்று இவரது பல்வேறு முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தன. இதன்மூலம் சேவாக் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, தோனிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. கங்குலியின் கேப்டன்ஷிப் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமே பயிற்சியாளர் ஜான் ரைட்தான். பொதுவாக, ஒரு அணி சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் கேப்டன் பயிற்சியாளர் ஆகியோருக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும்.
இவர்களது கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட்டானதால் 2000 முதல் 2005 வரை இந்திய அணிக்கு பொற்காலம். 2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப்போட்டி, 2002 நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, அதே ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை இலங்கை அணியுடன் பகிர்ந்துகொள்ளுதல், பின் 2003 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி என இந்திய அணி பல உச்சங்களை எட்டியது. குறிப்பாக, 2002 லாட்ர்ஸ் வெற்றியின்போது இவர் பால்கனியில் டி ஷர்ட்டை கழட்டி செலப்பிரேட் செய்ததை இப்போதும் நினைத்தால் நம்மை மெய்சிலிர்க்கவைக்கும். அதற்கு அவர் கூறிய காரணம் வேற லெவல்!
ஜான் ரைட்டின் பதவிக்காலம் முடிந்தப் பிறகு அவரைப் போல இந்திய அணியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக, ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பிலை இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்குமாறு கங்குலி கேட்டுகொண்டார். ஆனால், கிரேக் சேப்பல் எண்ட்ரி தந்தவுடன் ஃபிட்னஸ் காரணமாக கங்குலியையே அணியிலிருந்து நீக்கினார். பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்த கங்குலிக்கே மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க போராட வேண்டிய சூழல் உருவாகியது.
அதன்பின், 2007 ஜனவரியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து 97 ரன்களை விளாசினார். ஒருநாள் போட்டியில் கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அப்போதே நிரூபித்திக்காட்டினார் கங்குலி. கிரேக் சேப்பல் அணியில் செய்த மாற்றங்களினால்தான் இந்திய அணி 2007 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு நடையைக் கட்டியது. இருப்பினும், அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்களின் வரிசையில் கங்குலி இரண்டாவது இடத்தில் இருந்தார்.