கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பொறுப்பில் உள்ளார். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரின் இந்தியா சிமெண்ட்ஸ் குழுவின் துணைத் தலைவர் பதவியிலும் இருக்கிறார்.
எனவே, ஒரு வீரர் இரட்டை பதவியில் இருப்பது பிசிசிஐயின் விதிமுறைகளை மீறும் செயல். இதனால், அவர் மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இரட்டை பதவி தொடர்பாக, ராகுல் டிராவிட் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென பிசிசிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ராகுல் டிராவிட்டுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி களமிறங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்த ஆதாய முரண்தான் இந்திய கிரிக்கெட்டில் புதிய ஃபேஷன். இது செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி... கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
ராகுல் டிராவிட்டு ஆதரவாக குரல் கொடுத்த தாதா கங்குலியின் கருத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’இது உண்மைதானா? இந்த விவகாரம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இவரைவிடவும் சிறந்த வீரர் யாரும் கிடைக்கமாட்டார்.. லெஜண்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது அவர்களை அசிங்கப்படுத்தும் செயல். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்களது சேவை தேவை. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த குற்றச்சாட்டில் கங்குலி, சச்சின், லட்சுமணன் ஆகியோர் சிக்கியிருந்தாலும் அவர்கள் தங்களது விளக்கத்தை அளித்திருந்தனர். இவர்கள் மீதும் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தாதான் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவிட், கங்குலி இருவரும் 1996இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். அதன்பின்னர், இவ்விரு வீரர்களும் இந்திய அணிக்காக எண்ணற்ற பங்களிப்புகளையும், மறக்க முடியாத தருணங்களையும் தந்துள்ளனர்.