ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பேட் கம்மின்ஸ். 26 வயதே ஆனா கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசிவருவதால் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் பேட்டிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்சை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரூ.15.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதுவே ஐபிஎல் தொடரில் ஒரு வெளிநாட்டு வீரருக்காக வழங்கப்பட்ட அதிக தொகையாகும். முன்னதாக 2017ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜியண்ட்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ரூ. 14.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதிக தொகையாக இருந்தது.
தற்போது ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.