ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே பிற அணிகளுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் அதிக அளவிலான மூத்த வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியை பலரும் டாடிஸ் ஆர்மி என கிண்டல் செய்தனர். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 2018இல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கடந்த சீசனிலிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி ஒரு ரன்னில் மும்பை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தங்கள் அணியில் மாற்றம் செய்தன. இதனிடையே வீரர்களை மாற்றம் செய்வதற்கான கடைசி நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள ஐந்து வீரர்களின் பெயர் வெளியாகும் என பதிவிட்டிருந்தது.