2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கேதர் ஜாதவ் விடுவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துக்கொள்ள உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில் கடும் விமர்சனங்களை சந்தித்த கேதர் ஜாதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட வீரர்களை விடுவிப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த கேதர் ஜாதவ் 8 போட்டிகளில் விளையாடி 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் இவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்த நிலையில், சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஹேன் வாட்சன் (ஓய்வு) உள்ளிட்ட வீரர்களையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை டுவைன் பிராவோ, பாப் டூ பிளசிஸ் ஆகியோரை தக்கவைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது.