இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12வது சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி வந்தாலே, ஏன் அந்த அணியின் பெயரைக் கேட்டாலே பிற அணிகளுக்கு லேசான பயம் வந்து போகும் என்றால் அந்த அணியின் பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறினால் அது மிகையாகாது. காரணம் அந்த அணி ஆரம்பம் முதல் இன்று வரை செய்யாத சாதனைகள் கிடையாது, தொடாத உயரம் கிடையாது.
2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, ஐபிஎல் முதல் தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வாங்கியது. அவர் தொட்டால் எல்லாம் துளங்கும் என்பார்கள் அது போல் தான், அவர் தலைமை வகித்த சென்னை அணியை முதல் தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்றார்.
அந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆடிய முதல் போட்டியிலேயே 240 ரன்கள் குவித்து டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியரான மைக் ஹசி 116 ரன்கள் அடித்து அசத்தினார்.
அதன்பின்பு தொடரில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை சென்று, கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றியை விட்டுக்கொடுக்க நேரிட்டது. ஆனால் அடுத்த தொடரில் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்க நகருக்கு மாற்றப்பட்டது. அப்போதும், அந்த அணி வெற்றிக்கனியை தொட முடியாமல் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது.
அந்த தோல்வியையடுத்து பேட்டியளித்த சென்னை அணியின் கேப்டன் தோனி சற்று தனது வீரர்களை கடிந்து கொண்டார். அவர் பிற அணிகள் போல் நாம் ஊர் சுற்ற வரவில்லை. எனவே அடுத்த சீசன்களில் கோப்பையை வெல்லும் நோக்கில் விளையாட வருமாறு கூறினார்.
அவர் கூறியதைப்போன்று அடுத்த சீசனும் தொடங்கியது. ஆனால் அந்த சீசனில் சிஎஸ்கே அணி சற்று தடுமாற்றத்தையே சந்தித்தது. இறுதிக்கட்டத்தில் அந்த அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற கட்டாயத்தில் பஞ்சாப் அணியுடன் கடைசி லீக் போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில், 192 ரன்களை சேஸ் செய்த சென்னை அணியின் மேல்வரிசை வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 148 ரன்கள் குவித்த நிலையில் வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த தொடரில் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், சென்னை அணியை அரையிறுதிக்குள் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடினர். சிஎஸ்கே வின் விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா போடாத ஆட்டமில்லை.
அவரின் ஆட்டத்திற்கு தோனி தனது பேட்டால் பதில் கொடுத்தால். ஆம் அப்போட்டியில் தான் பலரும் தோனியின் கோபத்தை பார்த்தார்கள். இறுதி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டு சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்ததோடு அரையிறுதிக்குள்ளும் அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி மும்பை அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி தனது முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
அடுத்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை கைப்பற்றி பிற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தது.
அதற்கு அடுத்த மூன்று சீசன்களிலும் பைனலுக்கு முன்னேறிய சிஎஸ்கே கொல்கத்தாவிடம் ஒருமுறையும், மும்பையிடம் இரண்டு முறையும் கோப்பையை நழுவவிட்டது.
சென்னை அணிக்கு மற்றொரு சறுக்கலாக 2015 ஆம் ஆண்டு தொடரில், அந்த அணியின் உரிமையாளர் சூதாட்ட புகாரில் சிக்கியதால் சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த அணி கலைக்கப்பட்டது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் அந்த அணியின் மீது சுமத்தப்பட்டாலும், ரசிகர்கள் சென்னை அணிக்கு துணையாக இருந்து வந்தனர். அடுத்த இரண்டு சீசன்களில் சென்னை அணி விளையடாவிட்டாலும், மைதானங்கள், மற்றும் சமூகவலைதளங்களில் அந்த அணிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
எனினும் அந்த அணியின் வருகையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரில் புதிய பொழிவுடன் சென்னை அணி திரும்பியது. அப்போது கூட அணியில் அதிகபடியான சீனியர் வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியை ஃபாதர்ஸ் ஆர்மி என சிலர் கலாய்த்தனர்.
ஆனால் அந்த ஃபாதர்ஸ் ஆர்மி மீண்டும் ஒருமுறை கோப்பையை எளிதாக கைப்பற்றி அணியில் இருப்பது ஃபாதர்ஸ் மட்டும் அல்ல கிரிக்கெட்டின் காட் ஃபாதர்ஸ் என்பதை உணரச் செய்தனர்.
சென்னை அணியின் பலம் என்றால் பலவற்றைக் கூறலாம், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடங்கி 11வது வீரரான பவுலர்கள் வரை அனைவரும் தங்களுக்கென தனித்துவம் கொண்டவர்களாக் இருப்பது தான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய பலம்.