ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதில், 186 வெளிநாட்டு வீரர்கள், 143 உள்நாட்டு வீரர்கள் என மொத்தம் 332 பேர் இறுதிக்கட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இதிலிருந்து 73 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
இந்த ஏலத்தில் கலந்துகொண்டு வீரர்களை தேர்வு செய்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர், உரிமையாளர் ஆகியோர் அடங்கிய குழு இன்று மாலை கொல்கத்தா சென்றடைந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் சென்றடைந்தப் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரையில், 20 வீரர்களை தக்கவைத்துகொண்டு ஐந்து வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளது. இதனால், நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியிடம் ரூ. 14.6 கோடி கையில் உள்ளது. இந்த தொகையின் மூலம், எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே அணியினர் தேர்வு செய்வர் என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.