மாலத்தீவு ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் சென்னைக்கு வருகைத் தந்து ஒரு மாதம் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது.
மாலத்தீவு அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு, பி.சி.சி.ஐயின் மூலமாக அந்நாட்டுஆடவர், மகளிர்கிரிக்கெட் அணிகளை மேம்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் மாலத்தீவு கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஒரு வார காலமாக அளித்துவந்த இரண்டாம் கட்ட பயிற்சியானது கடந்த 14ஆம் தேதி முடிவடைந்தது.
இதில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் ஆசிரியர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.இது குறித்து அறிவிப்பை பிசிசிஐ தனது அதிகார்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதற்கு மாலத்தீவு கிரிக்கெட் வாரியமும் நன்றி தெரிவித்து பதிவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்திய நடுவர் ஷவிர் தாராபூர் தலைமையிலான இரண்டு பிசிசிஐ நடுவர் பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சி வகுப்புகளை நவம்பர் 19 (இன்று) முதல் 26ஆம் தேதிவரைநடத்தவுள்ளனர். இதில், மாலத்தீவின் 23உள்ளூர் நடுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதத்தில் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தங்களது தீவில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்ட இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என மாலத்தீவு அரசு அவரிடம் கேட்டுகொண்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு அதற்கான முயற்சிகளை தொடங்கியது.
அதன்பின் மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமரான மோடி, மாலத்தீவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலிக்கு பரிசளித்தார்.
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலி, தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் இந்தியா 2015இல் எடுத்த முடிவால் ஈர்க்கப்பட்டதால், அவர் மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் கட்டித் தர இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தாக நம்பப்படுகிறது.
2015இல் பிசிசிஐக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் நடந்துக்கொண்டிருந்ததால், அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் உள்ள ஷாஹித் விஜய் சிங் பாத்திக் விளையாட்டு வளாகத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான், முகமது நபி ஆகியோர் சர்வதேச அளவில் நட்சத்திர வீரர்களாக திகழ்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இவ்விரு வீரர்கள் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களாகவும் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற இந்தியாதான் உதவியது.
அதேபோல், தற்போது மாலத்தீவு அரசின் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள ஹூல்ஹூமாலேவில் கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கும், கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள இளம் மாலத்தீவு கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியளிப்பதற்கும் இந்திய அரசாங்கும் மாலத்தீவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் பங்குபெற மாலத்தீவு அணிக்கு ஐசிசி அனுமதி வழங்கியது. அதன்படி, அந்த அணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.