தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு கிரிக்கெட். ஒரு சிலர் இதனை பொழுதுபோக்கிற்காக விளையாடினாலும், பெரும்பாலானோர் சச்சின், தோனி போன்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் விளையாட்டை தொடர்கின்றனர்.
ஆனால், அது பலருக்கு கனவாகவே மாறிவிடுகிறது. ஒரு சிலருக்கு மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு மேல் அவர்கள் செல்வதற்கான வாய்ப்புகளை சரியாக தேர்வு செய்யமுடியவில்லை. காரணம் பெரும்பாலான வீரர்கள் சிறுவயது முதலே கிரிக்கெட் கிளப்களில் பயிற்சி பெற்று, நடைமுறை விதிகளின்படி ஆட்டத்தை விளையாடுவார்கள்.
ஆனால் கிராமப்புறங்களிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சி பள்ளிகளில் சேர்ந்த பயிற்சி பெரும் அளவிற்கு வசதிகளோ, வாய்ப்புகளோ கிடையாது. அப்படி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றும், தமிழ்நாடு அணிக்காக விளையாட முடியாமல் இருந்தவர்களின் பட்டியலில் சுரேஷும் ஒருவர்.
ராமநாதபுரம் போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டம் என்பதால் அவரால் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதைத்தாண்டி சென்று அவரால் விளையாட இயலவில்லை. இதனால் சுரேஷ் கடந்த 6 வருட காலமாக மாவட்ட கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் சுரேஷ் சீதக்காதி விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி, அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு பயிற்சி அளித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு காரணமாக விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர்கள் அனைவரும் அவரின் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.
ஏழை இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்
இந்நிலையில் ஏழை மாணவர்களும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய பயிற்சியளர் சுரேஷ், கடந்த அக்டோபரில் இலவச கிரிக்கெட் பயிற்சியை சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தொடங்கினார். ஆரம்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்க தயக்கம் காட்டினாலும், சுரேஷ் பயிற்சி கொடுக்கும் முறைகளைப் பார்த்த பின்னர் தங்களது பிள்ளைகளை பயிற்சிக்கு அனுப்பினர்.
இதுகுறித்து பயிற்சியாளர் சுரேஷ் கூறும்போது, நாங்கள் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சி மற்றும் உடல் தகுதி ஆகியவற்றை எவ்வாறு செய்வது என்ற புரிதல் இல்லை. அதனால் எங்களைப் போன்ற பயிற்சியாளர்களால் பெரிய அளவில் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் தற்பொழுது உள்ள சிறுவர்கள், இளைஞர்களுக்கு அதற்கான வழிகள் இருக்கிறது.
நான் கடந்த இரண்டரை மாத காலமாக இலவச கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன். தற்பொழுது 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனைத்து வயதினரும் என்னிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பந்துவீச்சு, பேட்டிங் செய்யும் முறை, கேட்ச் பிடிக்கும் முறை, பந்தை தடுக்கும் முறை போன்ற நுட்பங்களையும், அவர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க வாரத்தில் இருமுறை ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வருகின்றேன். இதனால் இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் மாவட்டம் முதல் டிஎன்பிஎல் (TNPL) போன்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தகுதியான ஆட்களாக மாற அதிகம் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் சுரேஷிடம் இலவச பயிற்சி பெறும் ஷார்கிஸ் என்ற மாணவன் கூறுகையில், கிரிக்கெட் என்பது பணம் படைத்தவர்களுக்கான விளையாட்டு என்ற எண்ணம் இருந்துவந்தது. என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களால் அதற்கான பயிற்சியை பெறுவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் எங்களுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக இலவசமாக பயிற்சிகளை அளிப்பதுடன், நல்ல ஊக்குவிப்பாளாராகவும் இருந்துவருகிறார். எங்களுக்குத் தேவையான கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுத்தருவதன் மூலம் எதிர்காலத்தில் நன்றாக விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
மற்றொரு மாணவன் மணீஸ்பால் கூறும் போது, நான் எங்கள் வீட்டின் அருகே தெருக்களில் கிரிக்கெட் விளையாடி வந்தேன். எனக்கு சிறந்த பவுலராக வேண்டும் என்ற ஆசை அதிகம், என்னால் அதிக பணம் செலுத்தி அதற்கான பயிற்சியை மேற்கொள்ளும் அளவுக்கு வீட்டில் வசதி இல்லை. தற்பொழுது சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் இலவச பயிற்சி அளிப்பதை கேள்விப்பட்டு கடந்த இரண்டரை மாதங்களாக இங்கு பயிற்சி பெற்று வருகிறேன். இங்கு எனக்கு பந்து வீசும் நுணுக்கங்கள் குறித்தும், எவ்வாறு பந்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சியாளர் சுரேஷ் நன்றாக கற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறும் என்று நம்புவதாக கூறினார்.
இதுகுறித்து பயிற்சி மாணவன் ஆதிலிங்கம் கூறுகையில், நான் கடந்த ஐந்து வருடங்களாக இங்கு விடுதியில் தங்கி கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறேன். இதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், சில மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி இருக்கிறேன். நான் சிறந்த பவுலராக ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். பயிற்சியாளர் சுரேஷ் அதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்த பயிற்சிகளின் மூலம் வரும்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவேன் என்று தெரிவித்தார்.
சிறுவர்களின் கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் சுரேஷ் போன்ற பயற்சியாளர்களால் வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் பல நடராஜன்கள் விளையாட வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பயிற்சியாளர் சுரேஷின் முயற்சிக்கு ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.
இதையும் படிங்க:'சாம்பியன்ஷிப் பெல்ட்டை கைப்பற்றுவதே எனது கனவு' - ரித்து போகத்