கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகில் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் வருவாய்களை இழந்து வருகின்றது.
இதன் காரணமாக உலகின் கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறையும் தருணத்தில் அடுத்தடுத்தப் போட்டிகளை நடத்தி வருவாயை ஈட்டும் முயற்சியில் கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனையடுத்து இத்தொடரை ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், 'இந்திய அணியுடனான ஐந்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து தற்போது என்னால் எதுவும் குறிப்பிட முடியாது. இருப்பினும், பிசிசிஐ-வுடனான எங்களது நட்பு மிகவும் வலிமையானது. ஆனால், தற்போது நாங்கள் இந்திய அணியுடனான ஐந்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம்.
வருங்காலங்களில் நாங்கள் இவ்வகைத் தொடர்களை நடத்துவது குறித்து ஏற்கெனவே விவாதித்துள்ளோம். இருப்பினும் 2023ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை செயல்படுத்த முடியுமா என்று கேட்டால், அது சந்தேகம் தான். அதேபோல் அடுத்த சீசனில் என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் நாங்கள் தற்போதே அதற்கான முடிவுகளை மேற்கொண்டு வருகிறோம்.
கரோனா வைரஸுக்கு மத்தியில் வீரர்களையும், ஊழியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் நடத்தும் வாய்ப்பை வாரியம் கவனித்து வருகிறது' என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரஷ்ய கால்பந்தாட்ட வீரர் சமோக்வலோவ் உயிரிழப்பு - சோகத்தில் ரசிகர்கள்!