கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மதம் முதல், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, வீரர்களுக்கு சம்பளப் பிடித்தம், அலுவலகத்தில் பணி புரிவோருக்கு வேலை இழப்பு போன்றவைகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தமது 200 பணியாட்களை வேலையிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தற்போது மேலும் 40 நபர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சி ஏ வின் அறிக்கையில், "கரோனா வைரஸ் காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருவாய், உயிர் பாதுகாப்பு செலவுகள் மற்றும் போட்டி வருகை போன்ற பிற காரணிகளின் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை குறைக்க இயலும். ஆனால், வருந்தத்தக்க வகையில், இந்தத் திட்டத்தின் மூலம் 40க்கும் மேற்பட்டோர்களுக்கு பணியிழப்பும் நிகழும். மேலும் நேரத்தையும், வீண் செலவினங்களையும் குறைக்கும் முயற்சியாக இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் குறித்து ஐசிசி, இன்னும் சரியான முடிவுகளை எடுக்காததால், இத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது.