கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வங்கதேசத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 91 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வங்கதேசத்தில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக, வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்பிகுர் ரஹிம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தபோது பயன்படுத்திய 'சாதனை பேட்'டை ஏலத்தில் விற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முஷ்பிகுர் தனது ட்விட்டர் பதிவில், “சர்வதேச டெஸ்டில் எனது முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்ததால், இந்த 'சாதனை பேட்' எனக்கு மிகவும் விலைமதிப்பற்றது. இந்த பேட்டுடன் நிறைய நினைவுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எனது நாட்டு மக்களின் நலனுக்காக, இதனை தற்போது ஏலத்தில் விற்க முடிவுசெய்துள்ளேன். தயவு செய்து எனது நாட்டு மக்களுக்காக முன்வந்து உதவுங்கள். மேலும் தகவலுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.