கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் உலகின் அனைத்து நாடுகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மேலும் பல நாடுகளில் நடைபெற இருந்த விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டும், முற்றிலுமாக கைவிடப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கவுண்டி கிரிக்கெட் கிளப்பான யார்க்ஷயர் அணியில் இந்தாண்டு விளையாடுவதற்காக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், இங்கிலாந்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழலினால் கவுண்டி கிரிக்கெட் அணிகள் தங்களது அணி வீரர்களிடம் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் படி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து அஸ்வின், மஹராஜ், பூரான் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து யார்க்ஷயர் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து யார்க்ஷயர் அணியின் செயலாளர் மார்ட்டின் மோக்சன் (Martyn Moxon) கூறுகையில், 'முதலாவதாக இந்த வீரர்களின் புரிதலை நான் பாராட்டுகிறேன். மேலும் எங்களது அணியிலுள்ள மற்ற வீரர்களையும் நாங்கள் தொடர்பு கொண்டு இப்பெருந்தொற்று குறித்தான ஆலோசனையை வழங்கி வருகிறோம். மேலும் இந்த சீசனில் நடைபெறவிருந்த கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்தும் தெளிவுபடுத்தி, அவர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பையை தொடங்குவது கடினமே!