கோவிட்-19 பெருந்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் ஐம்பது லட்சம்பேர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, வீரர்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட பயிற்சிகளுக்கான அனுமதியை அளித்துள்ளன. இதைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கமும், தங்களது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், 'இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை இலங்கை அரசு வழங்கியுள்ளது. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வீரர்களின் பயிற்சிகள் தொடங்குவது குறித்து, இலங்கை அணியின் கேப்டன்கள் லசித் மலிங்க, திமுத் கருணரத்ன ஆகியோரிடம் ஆலோசித்து வருகிறோம். அதே சமயம் அரசு அனுமதியளித்தால் வேகப்பந்து வீச்சாளர்களும் பயிற்சியில் கலந்துகொள்வர்' என்று தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பயிற்சி ஆட்டங்களுடன் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பந்துகளில் சானிடைசர்; ஐசிசியிடம் அனுமதிகோரும் ஆஸி.!