சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் (கோவிட் - 19) இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் இந்தக் கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தேவருகிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இந்தியாவில் இந்த வைரசால் இதுவரை 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் மார்ச் 29ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெறுமா, நடைபெறாதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மறுமுனையில் இந்த வைரஸை பரவவிடாமல் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளையும் நிறுத்திவைத்துள்ளது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஐபிஎல் நிர்வாகிகள் நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளனர்.
அதில், ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? ஒருவேளை ரசிகர்கள் இல்லாமல் இந்தத் தொடர் நடைபெறுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நாளை மறுநாள் பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக, ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்குமாறு மகராஷ்டிரா, பெங்களூரு சுகாதாரத் துறை சார்பில் பிசிசிஐயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு!